மதுரையில் கூலி தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அய்யர்பங்களாவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான செந்தில்குமார் பன்றி வளர்த்து விற்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாரின் உறவினரான காமராஜ் என்பவரும் பன்றி வளர்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இதனால் இருவருக்கும் இடையே தொழில் ரீதியான பிரச்சனைகளும் முன்விரோதங்களும் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் செந்தில்குமார் வளர்த்து வந்த பன்றி ஒன்று காணாமல் போனதால் அவர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். இருப்பினும் பன்றி எந்த இடத்திலும் இல்லாததால் உறவினரான காமராஜிடம் சென்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடு திரும்பிய செந்தில்குமாரை வழியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அங்கு வந்த சில நபர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இருப்பினும் செந்தில்குமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் காமராஜ் மகன்கள் தான் இச்சம்பவத்தினை செய்திருக்கிறார்கள் என்பது அம்பலமானது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.