திண்டுக்கல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்ததால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் செல்வராஜ் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அதே பகுதியில் வசித்து வரும் அதிவீரபாண்டியனுக்கும் சம்பந்தம் உள்ளதாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதிவீரபாண்டியனுக்கு மீனாட்சி என்ற பாட்டி உள்ளார். அதிவீரபாண்டியன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று பாட்டி மீனாட்சி இறந்து விட்டார். இந்த துக்க வீட்டில் கலந்து கொள்வதற்காக அதிவீரபாண்டியன் வருவார். அவரை பழிக்குப்பழி கொலை செய்யலாம் என்று செல்வராஜ் என்பவரது மகன் கார்த்திக்கும், அவரது உறவினர்களும் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அதிவீரபாண்டியன் அங்கு வரவில்லை. அதற்கு பதிலாக அவரது நண்பர்களான ஏ.வெள்ளோட்டை பகுதியில் வசித்து வரும் சுரேந்தர், கபிரியல் குணசேகரன் ஆகிய இருவரையும் துக்க வீட்டிற்கு அதிவீரபாண்டியன் அனுப்பி வைத்திருந்தார்.
அங்கு கார்த்திக் தரப்பினருக்கும், கபிரியல் குணசேகரன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பயங்கர மோதலாக மாறியுள்ளது. அந்த மோதலில் இருதரப்பினரும் சேர்ந்து துக்க வீட்டில் போட்டிருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் துக்க வீடு போர்க்களமாக காணப்பட்டது. மோதலில் கபிரியல் குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் சடையாண்டி, கார்த்திக், கல்யாணி, லட்சுமி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.