திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்ப்பதற்காக கொரோனா விதிமுறையை மீறி ஏராளமான மக்கள் குவிந்ததால் படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களிடமும், முககவசம் அணியாமல் செல்பவர்களிடமும் அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள், திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அதனைக் கண்ட அதிகாரிகள் அருகில் சென்று பார்த்தபோது விஜய் சேதுபதியின் புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் சினிமா படப்பிடிப்பில் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்டம் கூடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சினிமா படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 5000 அபராதம் விதித்துள்ளனர். படக்குழுவினருக்கு அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2 தனியார் பேருந்துகளில் மக்கள் நெருக்கமாகவும், முககவசம் அணியாமலும் சென்று கொண்டிருந்தனர். அதனை கண்ட அதிகாரிகள் 2 பேருந்து கண்டக்டர்களிடமும் ரூ. 500 அபராதமாக வசூலித்துள்ளனர்.