சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் தரமான உணவு பொருட்களை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராஜாதுரைசிங்கம் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பிற்பட்டோர் விடுதி கல்லூரி அருகே உள்ளது. இந்த விடுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் புளித்த மற்றும் கெட்டுப்போன இட்டிலியையும், தரமற்ற உணவுகளையும் மாணவர்களுக்கு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்கள் பல முறை விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை விடுதி வார்டன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தரமான உணவு பொருள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.