மன்னராட்சியின் கீழ் தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த பகுதி புதுக்கோட்டை. ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்றும் மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்ததும் புதுக்கோட்டையில் தான். ஒரு பகுதியில் விவசாயத்தையும், பரவலாக சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்ட பகுதியாக உள்ளது.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை தலா 1 முறை வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ திமுகவின் பெரியண்ணன். தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,43,229 ஆகும். போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில் திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் கழிவுநீர் சாலைகளில் ஓடும் நிலை உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தலைமை மருத்துவமனை புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டதால் சிரமங்களை சந்திப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தைலம் மரங்களையும், வேலிகாத்தான் மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. முந்திரி தொழிலை ஈடுபடுவோருக்கு தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உதவிகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் வேண்டும் என்பதும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. பொது மக்களின் நீண்டகால கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தும் அதிமுக அரசு செவிசாய்க்க மறுப்பதாக தொகுதி எம்எல்ஏ பெரியண்ணன் குற்றம் சாட்டுகிறார். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை தொகுதியில் பெரும்பாலான குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என்றும் புகாராக உள்ளது.