1200 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அதனை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு அவனியாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து வேனில் சோதனை செய்தபோது அதில் 1200 கிலோ ரேஷன் அரிசி மூட்டை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேனை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் வசித்து வரும் வீராச்சாமி என்பதும், வேனில் இருந்து தப்பி ஓடிய அந்த நபர் விருதுநகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் ரேஷன் அரிசி மூட்டைகளை வேனுடன் பறிமுதல் செய்த காவல்துறையினர் வீராச்சாமி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.