திருமயம் சோழ பாண்டியப் பேரரசுகளின் எல்லையாக இருந்த பகுதி. முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்ட வரலாற்று சின்னமாக மலைக்கோட்டை திருமயத்தில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் ஒரே சுற்றுச் சுவருடன் கூடிய இடத்தில் இருப்பது திருமயத்தில் சிறப்பு. மேலும் ஒரே கல்லில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலும் தொகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.
திருமயம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போதய எம்எல்ஏ திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுபதி. திருமயம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,27,144 ஆகும். வேலை தேடி இளைஞர்கள் வெளியிடங்களுக்கு செல்வதால் தொகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.
பெல் நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள். பொன்னமராவதி பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த உயர்த்துவதுடன் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் அங்குள்ளவர்களின் கோரிக்கை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு திருமயத்தில் அரசு கல்லூரி உருவாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும்.
அரிமளம் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க தைல மரங்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். திருமயம் கோட்டை பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் கோரிக்கை. ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில்கள் திருமயத்தில் நின்று செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது. அரசு மாணவர் விடுதியை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.