Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தொகுதி கலைக்கப்பட்டு விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகைவரை ஓவியம் இத்தொகுதியின் சிறப்பு. அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்தி என்னும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்று தந்ததாகக் கருதப்படும் விராலிமலை முருகன் கோவில் இங்கு அமைந்துள்ளது. தேசிய பறவையான மயில் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.

சிறு குறு தொழில்கள் அதிகம் உள்ள பகுதியாக விராலிமலை உள்ளது. விராலிமலை தொகுதியில் உருவாக்கப்பட்ட பின் நடைபெற்ற இரு தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் தொகுதியின் எம்எல்ஏ. விராலிமலை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,24,550 ஆகும். தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.

தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் காணப்படும் பகுதி என்பதால் அவற்றை பாதுகாக்க மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. குண்டும் குழியுமாக கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விராலிமலை பகுதியினரின் வேண்டுகோள். குடுமியான் மலை அருகே உள்ள அண்ணா பண்ணையை மீண்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக உள்ளது.

அமைச்சரின் தொகுதியாக இருந்த போதும் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.விராலிமலையில் உள்ள அன்னவாசல், இலுப்பூர் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், போதிய உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் புதுக்கோட்டை அல்லது திருச்சி மணப்பாறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் அருகே உள்ள பொன் குளத்தில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும், திருச்சி மதுரை நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் உள்ளன. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Categories

Tech |