காரைத் திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது, திடீரென மர்ம நபர்கள் அந்த காரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் தாந்தோனிமலை வ.ஊ.சி நகரில் வசித்து வரும் நந்தகுமார் என்பவரும், காந்திகிராமம் பகுதியில் வசித்து வரும் அருண் என்பவரும் இணைந்து காரை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நந்த குமாரையும், அருணையும் கைது செய்த காவல்துறையினர் திருட்டுப் போன காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.