Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வட ஆர்க்காடு மாவட்டம் ஆக இருந்து 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டமான நிலையில் 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டையை  தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செஞ்சி ஆண்ட மன்னன் ராஜா தேசிங்குவின் மனைவியான ராணிபாய் பெருமையை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரை ஆற்காடு நவாப் நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை இயக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியும் வாலாஜாபேட்டை தான். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1967 தேர்தலில் முஸ்லிம் லீக்கும், 1971, 1989 தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. 1991, 2001, 2011 தேர்தலிலும் 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,65,626 ஆகும். சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியீடும் தோல் மற்றும் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மோசமடைந்து உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மூடப்பட்டுள்ள டிசிசி தொழிற்சாலையில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ராணிப்பேட்டை பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்பதும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ராணிப்பேட்டையில் மாவட்டம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Categories

Tech |