சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிதைந்த நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் கலன் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கொந்தகையிலும், கீழடியிலும், அகரத்திலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு குழியில் சில்லுவட்டுக்கள், பாசிமணிகள், பானை ஓடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் முதுமக்கள் தாழி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் சிறிய பானை ஓடுகள் சேதமுற்ற நிலையில் கிடைத்தது. மேலும் தொடர்ந்து ஆழமாக குழியை தோண்டியபோது தானியங்களை சேமித்து வைக்கும் மண்கலன் ஒன்று சேதமுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கலன் சுவருடன் ஒட்டிய நிலையில் சேதமுற்று காணப்பட்டது. இந்த கலன்களில் தானியம் சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும்போது சிறுக, சிறுக மக்கள் பயன்படுத்தியுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.