மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் காட்சி அளித்ததால் சிம்மபுரம் என்றும், சோழர்கள் ஆண்டதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக லட்சுமி நரசிங்க சுவாமி மற்றும் யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் இங்கு அமைந்துள்ளது. ஹைதர்அலியின் மைசூர் படைக்கும் திப்பு சுல்தானின் தலைமையிலான படைக்கும் இப்பகுதியில் போர் நடைபெற்றது.
உயிரிழந்த சிப்பாய்களின் நினைவாக உருவாக்கப்பட்ட காஜா சாகிப் கல்லறை இங்கு அமைந்துள்ளது. விவசாயமும், நெசவும் முக்கியத் தொழில்களாக உள்ளன. சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக, ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வென்றுள்ளனர். காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சம்பத்.
சோளிங்கர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,75,532 ஆகும். சோளிங்கர் தொகுதியில் எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் எந்த விதமான வசதிகள் இல்லை என்பதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் அல்லது சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறும் ரோப்கார் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
காலனி தொழிற்சாலை உருவாக்கப்படும் என இடைத்தேர்தலில் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது வெற்று வாக்குறுதியாக உள்ளதாகவும் புகார் கூறுகின்றனர். சோளிங்கரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டும் என்றும், சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.