மயிலாடுதுறையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதமும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் செல்ல வேண்டும். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து சொல்ல வேண்டும். இந்த வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் கையை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி வசதி செய்து கொடுக்க வேண்டும். இதனை பின்பற்றாமல் நடக்கும் பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுப்பையா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.