எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நம் மொழி, வலி, வரலாறு தெரியாதவர்களால் வழிநடத்த முடியாது. இப்படிப்பட்ட அற்பர்கள் இடம் நாட்டைக் கொடுத்துவிட்டு 50 ஆண்டுகளாக தவிர்க்கிறோம். அதிகாரம் மற்றும் அடையாளத்தை இழந்து விட்டோம். ஜாதி மதம் நம் அடையாளம் அல்ல. 50 ஆயிரம் ஆண்டுகளாய் தொடரும் தமிழே நம் அடையாளம். நான் ஆட்சியில் வந்தால் திராவிட கட்சிகள் தரும் எந்த இலவசமும் இருக்காது.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி தரமான மருத்துவம் இலவசமாக கிடைக்கும். மது, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் தடை விதிக்கப்படும். அதற்கு மாற்றாக பனை, தென்னம்பாளை மற்றும் துணிப்பை பயன்பாடு கொண்டுவரப்படும். எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் உறுதியளித்துள்ளார்.