பிரான்சில் பூட்டிய வீட்டை மர்மக்கும்பல் போதை கிடங்காக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் மார்செயின் என்ற பகுதியில் இருக்கும் வீட்டில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது அவர்கள் பூட்டிச் சென்ற பூட்டு மாறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் இருந்த பொருட்களை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், வீட்டிற்குள் 5 கிலோ எடையுள்ள கொக்கைன் என்ற போதை பொருள் இருந்தது. அதன் அருகிலேயே பத்தாயிரம் யூரோ பணமும் இருந்தது. இதுகுறித்து அந்த தம்பதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் காவல்துறையினர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியபோது தம்பதியினர் வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில் கடத்தல்காரர்கள் தம்பதியின் வீட்டை போதைப் பொருள் பதுக்கும் கிடங்காக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.