தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள 35 வாக்குறுதிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள 35 வாக்குறுதிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. அதில் சில…
* மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலா பயணமாக நிலவுக்கு அழைத்து செல்லப்படுவர்.
* இதற்காகவே தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.
* மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும், ‘ஐ-போன்’ வழங்கப்படும்.
* உலகம் வெப்பமயம் ஆவதால், 300 அடி உயர செயற்கை பனி மலை உருவாக்கப்படும்.
* விடுமுறை நாட்களில் மக்கள் பொழுது போக்க செயற்கை கடல் உருவாக்கப்படும்.
* இல்லத்தரசிகளுக்கு, வீட்டு வேலை செய்ய, ‘ரோபோ’ வழங்கப்படும்.
* இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம்.
* போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு, ஒரு படகு வழங்கப்படும். என்று 35 வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு உள்ளார்.