வாழப்பாடி பகுதியில் கடன் சுமை அதிகமானதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவராமன் பேன்சி ஸ்டோர் மற்றும் ஏல சீட்டு நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டில் பண நெருக்கடி இருந்ததாகவும், சீட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக அதிக தொல்லை செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் புது வீடும் கட்டியுள்ளார்.
இந்நிலையில் கடன் அதிகமானதால் மனமுடைந்த சிவராமன் நேற்று காலை தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராமனின் மனைவி கலா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எழுதி வைத்து தூக்கு போட்டுக்கொண்டார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.