மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்துத்தர கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்டு 150 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்கள் அனைத்திற்கும் உறை கிணறு ஒன்றினை மூல வைகை ஆற்றில் அமைத்து குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிமலை காடு பகுதிகளில் மழை பொழிவு போதிய அளவு இல்லை என்பதால் ஆற்றில் நீரின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் கோடை காலம் தொடங்கவிருப்பதால் ஆற்றில் வறண்ட சூழ்நிலை நிலவும். இதனைத் தொடர்ந்து கடமலை-மயிலைப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குடிநீரின் தேவை இருமடங்காக அதிகரித்திருக்கிறது.
எனவே உறை கிணறுகளில் குடிநீர் வெகுவாக குறைந்து கடமலை-மயிலை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவரும் மாற்று நடவடிக்கையாக ஆழ்துளை கிணறு ஒன்றினை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அந்தந்த பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து தண்ணீர் சிக்கனத்தை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.