மொபைல்போன் சார்ஜர் வெடித்து குடிசை வீடு தீ பிடித்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த பார தேசிங்கு ராஜா என்பவர் தனக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்றை வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அனைத்து இளைஞர்களும் வேலைக்கு சென்று விட்டனர். ஒரே ஒரு இளைஞன் வேலைக்கு செல்வதற்காக குளித்துக் கொண்டிருந்தான் அப்போது குடிசையில் திடீரென தீப்பற்ற தொடங்கியது. இதனை கண்ட பக்கத்து வீட்டினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீ வெகு விரைவாக பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இந்த தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சாம்பலாகின. ஆனால் யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டிலிருந்த மொபைல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசையில் தீப்பற்றியது தெரியவந்தது.