தைவானில் பயிற்சிக்காக சென்ற இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவானில் டைட்டுங்ஸ் ஜிஹுங் விமான நிலையத்திலிருந்து நான்கு போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் கப்பல், விமானம் மூலம் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மீட்புப்படையினர் பிங்டுங் பகுதியில் இருந்து ஸ்ஹூகை மீன்பிடி துறைமுகம் வரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அச்சமயம் துறைமுகத்தில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தொலைவில் கடலின் அருகே உள்ள சாலையில் ஒரு விமான இருக்கையும், பாராஷூட்டும் கிடப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் அங்கு காயங்களுடன் இருந்த ஒரு விமானியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இன்னொரு விமானி குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை மீட்பு படையினர் தொடர்ந்து தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.