தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என்றும், இறுதி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படாமல் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமன்றி மாணவர்களின் நலனை கருதி பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.