பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகர் 7-வது குறுக்குத் தெருவில் ஆரிப்ஹான்என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஹீராபானு. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஆரிப்ஹான் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஹீராபானு மாமியார் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஹீராபானு தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அயன்பேரையூர் தைகாலுக்கு பெற்றோர் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 20-ஆம் தேதி ஊருக்கு சென்ற ஹீராபானு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அங்கு வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டின் உள்ளே சென்று பீரோவை சோதித்து பார்த்தார். அதில் 15 பவுன் நகை மற்றும் உண்டியலில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது . இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.