தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் சரவணன் என்பவரது தேர்தல் அறிக்கையானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனைவருக்கும் ஐபோன், தொகுதி சில்லென்று இருக்க 130 அடி உயரத்தில் செயற்கை பனிமலை, விடுமுறையில் பொழுது போக்க செயற்கை கடல், 10 பேருக்கு 100 நாட்கள் சுற்றுப்பயணம், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும் என்று வியக்க வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.