அமெரிக்காவில் சூப்பர்மார்கெட் ஒன்றில் திடீரென்று நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் Boulder என்ற பகுதியில் அமைந்துள்ள King Soopers என்ற சூப்பர் மார்க்கெட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென்று அந்த நபர் கடையிலிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இக்கொடூர சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பத்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்து காவலில் வைத்து சிகிச்சையளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கடையிலிருந்து காலில் ரத்தம் வழிந்தபடி சட்டை இல்லாமல் வெளியில் வந்த நபரொருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனினும் சந்தேகத்திற்குரிய நபர் அவர் தானா? என்பது குறித்து தகவல்கள் தெரியவில்லை. மேலும் அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது வரை துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது? என்பது குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.