பெரம்பலூரில் மின் மோட்டார் தொட்டியில் குளிக்கச் சென்ற முதியவர் கால் தடுமாறி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கலம் கிராமத்தில் பெரியசாமி என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சௌந்தரராஜன் என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் மின்மோட்டார் தொட்டியும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி அந்த மின்மோட்டார் தொட்டியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அரும்பாவூர் காவல்துறையினர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.