கபிலர்மலை தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். பாமக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவின் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏவாக உள்ளார். பரமத்திவேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,20,986 ஆகும். ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இடும்பன்குளம் மற்றும் பல்லக்காபாளையம் ஏரிகளை தூர்வார வேண்டும் என்பதும் விவசாயிகளின் வேண்டுகோள். மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை திருமணிமுத்தாற்றில் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கடலையில் இருந்து எண்ணெய் எடுக்கும் அரவை ஆலை, மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் தேவை என்றும் வலியுறுத்துகின்றனர். ஜேடர்பாளையம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும், பூங்கா, படகு இல்லங்களை சீரமைக்க வேண்டும், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அனைத்து பேருந்துகளும் நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.