1977 ஆம் ஆண்டு முதல் மருங்காபுரி தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 8 முறை தொகுதி கைப்பற்றியுள்ளது. மணப்பாறை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,990 ஆகும். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் ஆர். சந்திரசேகர். மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.
பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த வெளிவட்ட சுற்று சாலை திட்டம் கிடப்பில் போட்டுவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரயில்வே மேம்பாலத்துடன் இணைந்த சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு தேவை என்பதும், வாசனை திரவிய தொழிற்சாலை தேவை என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
பொன்னணியாறு அணையை தூர்வார வேண்டும் என்பது வையம்பட்டி பகுதி விவசாயிகளின் விருப்பமாகும். மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதும், முறுக்கு தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர். புகழ்பெற்ற மணப்பாறை மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலாளர்கள் நலன் மேம்படுத்த நடவடிக்கை தேவை என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.