துறையூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் ஸ்டாலின் குமார். துறையூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,545 ஆகும். புளியஞ்சோலை ஐயாறு நதியில் பாசன வாய்க்கால் ஏற்படுத்துவதன் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
நெசவு மற்றும் தங்க நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். துறையுறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பச்சைமலையை ஒரே ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். துறையூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதும், உப்பிலியபுரத்தில் புதிய பேருந்து நிலையம் தேவை என்பது மக்களின் கோரிக்கை. ஐயாறு பாசன பகுதியில் விளையும் சீரக சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது. பெருமாள்மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நீர்நிலைகளை முறையாக தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாகும்.