முசிறி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிக அளவாக அதிமுக 8 முறை வென்றுள்ளது. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் செல்வராசு. முசிறி தொகுதியில் மொத்தம் 2,32,117 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தாத்தையங்கார்பேட்டை பகுதியில் கை கைத்தறி நெசவு தொழில் நலிந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கோரை பாய்களை சந்தைப்படுத்தவும், உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், திருச்சி நாமக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்பதும், காவிரி ஆற்றின் குறுக்கே லாலாபேட்டை வரை தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பள்ளி மாணவர்களுகான சத்துணவில் உலர் பழங்களை வழங்க வேண்டும் என்றும், வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கிராமப்புற சாலைகளை சீரமைக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.