தேனி மாவட்டத்தில் 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவனை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தேனி மாவட்டம் போடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபன் அப்பகுதியிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மாணவனது வீட்டிற்கு அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அக்கிணற்றில் தண்ணீர் இல்லாமல் பாழடைந்ததால் அப்பகுதி மக்கள் அதனுள் குப்பைகளை போடுவது வழக்கம். இதனால் கிணற்றினுள் குப்பை பாதி அளவாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் கருப்பசாமியின் மகன் தீபன் இரவு நேரம் சிறுநீர் கழிப்பதற்காக கிணற்றுக்கு அருகே சென்றுள்ளான்.
அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்த மாணவன் தன்னை காப்பாற்றுமாறு அலறியுள்ளான். இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்க முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.