அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் முடிவை இந்திய முப்படைகள் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவிடமிருந்து ப்ரேட்டக்டர்- பி என்ற ஆயுதம் தாங்கிய 20 ஆளில்லா விமானங்கள் மற்றும் 10 உளவு விமானங்களை வாங்க இந்திய முப்படைகள் திட்டமிட்டிருந்தன. 41 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானமான க்ளோபல் ஹக்கை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், இந்தியா தனது முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் தற்காப்பு தன்மை குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளது. ஆள் இல்லா விமானங்களின் விலையும் இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் ஒன்றின் விலை சுமார் 1300 கோடி ரூபாயை தாண்டுகிறது .இது ரபேல் போர் விமானத்தின் விலையைக் காட்டிலும் அதிகம் என்றும் கூறப்படுகிறது .
இது மட்டுமல்லாமல் தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் உள்ளதால் அந்த நாடுகளுடனான எல்லைகளில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் எத்தனை முறை ஆலோசிக்கப்பட்டாலும் அரசிடம் முன்மொழிவு கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .