சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மருத்துவ கல்லூரி கொரானா பிரிவு பொறுப்பாளர் டாக்டர் சூரியநாராயணன் மற்றும் மருத்துவர்கள், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது;-
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும். ஒரு தெருவில் மூன்று பேரோ, ஒரு வீட்டில் மூன்று பேரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் அப்பகுதியில் நுண்ணியமாக கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழைய அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம். ஏழு நாட்கள் வரை கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் வைத்திருந்து நோய் முழுவதும் குணமடைந்த பிறகே வீட்டிற்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.