பெரம்பலூரில் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டத்தை எல்.ஐ.சி. முகவர்கள் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எல்.ஐ.சி. முகவர்கள் அலுவல் நேரத்தை ஓய்வு தினமாக கடைபிடிக்கும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், எல்.ஐ.சி.யில் அன்னிய முதலீடு மற்றும் தனியார் மயமாக்கல் செய்வதை கைவிட கோரியும், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வலியுறுத்தியும், பாலிசிக்கான ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், எல்.ஐ.சி.யின் அனைத்து சேவைகளையும் ஒரு நாள் புறக்கணித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் முகவர்கள் சங்க கிளை தலைவர் காமராஜ் தலைமையில் எல்.ஐ.சி. முதன்மை ஆலோசகர்கள் சங்கம் மற்றும் எல்.ஐ.சி. தஞ்சை கோட்டத்தின் பெரம்பலூர் கிளை முகவர்கள் சங்கம் சார்பில் வெங்கடேசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் நடராஜன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார். பொருளாளர் சுப்புராஜ், செயலாளர் சந்திரமோகன், பிரதிநிதி சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் பேசினார்கள்.