பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரம்பலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கியுள்ளார். தலைவர் அகஸ்டின், மாவட்ட செயலாளர் துரைசாமி, நிர்வாகிகள், பொருளாளர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் இதர பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் சேம நல நிதி, தொழிலாளர் மாநில காப்பீடு மற்றும் காப்புறுதி தொகைக்காக பணத்தை பிடித்தம் செய்து முறைகேடு செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய ஓய்வு ஊதியம் மற்றும் பணப்பயன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி நிர்வாகமே ஒப்பந்த முறையை கைவிட்டு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.