புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் .
நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு , படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் , புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் மட்டுமே அதிகமான விவாதங்கள் மக்களிடையே நடைபெற்று வருகிறது . இக்கொள்கை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வந்தாலும் அதனை மக்கள் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது குறித்த தகவல்கள் யாரிடமும் சென்றடைவதில்லை.
தற்போது திரைப்பட பிரபல நடிகர் சூர்யா இது குறித்துப் பேசியது தமிழக மக்களிடையே விரைவாகச் சென்றடைந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி , இயக்கத்தை சார்ந்தவர்கள் சாராதவர்கள் என யாராக இருப்பினும் பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையை நடிகர் சூர்யா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .