தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் சேர்ந்து 5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த இரண்டு கரடிகளும் அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது. எப்படியும் அந்த கரடிகள் மறுபடியும் ஊருக்குள் வரும் என்று எண்ணி, ஊர்மக்கள் வனத்துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் கரடிகளை பிடிப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கரடி தாக்கியதில் காயமடைந்தவர்கள் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.