சிவகங்கை திருப்புவனம் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமன் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும்.
கிருமி நாசினிகளை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுபுற மற்றும் கோவில் வளாகத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விதிகளை மீறி நடந்தால் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.