சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம்-சிரமம் சந்திப்பு சாலையில் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆவணமில்லாமல் காரில் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வியாபாரத்திற்காக அந்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும், பணத்திற்கான உரிய ஆவணம் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.