இந்திய ஸ்டேட் பாங்க் வங்கியில் நாமக்கல் வேட்பாளர் மக்களுக்கு கொடுக்க கடன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதியில் ரமேஷ் என்பவர் அகிம்சா சோசியலிஸ்ட் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.இதனிடையில் அவர் காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெடுடன் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் எஸ்.பி.ஐ வங்கி விஜய் மல்லையா போன்றோற்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும் அதுபோன்று தமக்கு வெறும் 46 ஆயிரம் கோடியை மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். நான் போட்டியிட இருக்கும் நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் பெருமக்களின் 100 சதவீதம் வாக்களிப்பை தனக்கு அளிக்க உறுதி செய்வதற்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது அந்த வங்கி மேலாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கி மேலாளர் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி மனுவை பரிசீலனை செய்வதாக கூறினார். ஓட்டு போடுவதற்காக தங்கள் தொகுதியில் உள்ள மக்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர் ரமேஷால் நாமக்கலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது