நாகையில் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை அடுத்த பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை எழுத்துப்பூர்வ பணி உத்தரவாதத்துடன் வழங்கக்கோரியும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி.பி.சி.எல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சி.பி.சி.எல் ஆலை வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் பொதுச் செயலாளர் கண்ணன், அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து அனைவரும் வேலையில் ஈடுபட்டனர்.