மதுரையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மூதாட்டி ஒருவர் சாமி வந்து அருள்வாக்கு கூறினார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென சாமியாடி அமைச்சருக்கு அருள்வாக்கு கூறினார். அதன் பிறகு அமைச்சர் சாமியாடிய மூதாட்டிக்கு சால்வை போற்றி தனது பரப்புரையை தொடங்கினார்.