ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண மக்களுக்கு கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொடிய விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடும் வெள்ளப்பெருக்கில் விஷத்தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளது. இந்த எட்டுக்கால் பூச்சிகள் தான் உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்டவை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த பூச்சியினால் பிளேக் போன்ற கொடிய நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு தான் மழை குறைந்து சூரியவெளிச்சம் தென்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் காரணமாக விஷத்தன்மை கொண்ட அந்த எட்டுக்கால் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வீட்டிற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த எட்டுக்கால் பூச்சி கடித்து ஏற்கனவே சிலர் இறந்ததாக தகவல் வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.