இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது பற்றி புகார் எழுந்தால் ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐசிசி யின் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், அனில் கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கமிட்டி, இதுபற்றி கூடி விவாதிக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மானேஜர் ஜியாஃப் அலர்டைஸ் தெரிவித்துள்ளார். “போட்டி சமனில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் கடைபிடித்து வெற்றியை தீர்மானிக்கும் முறை 2009-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது பற்றி புகார் எழுந்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.