பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாடு திருப்பி பெறாவிட்டால் அந்த நாட்டிலிருந்து வரும் யாருக்குமே விசா வழங்கப்படாது என்று பிரிட்டன் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களது சொந்த நாடு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்குமே விசா மறுக்கப்படும் . இந்த சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. தற்போது இதுபோன்ற ஒரு சட்டத்தையும் பிரிட்டனிலும் கொண்டுவர அந்நாட்டின் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் ஈராக், ஈரான், சூடான், பாகிஸ்தான், எரித்திரியா போன்ற நாடுகள் சிக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாடு கடத்தப்பட வேண்டிய 10,000-க்கு அதிகமான குற்றவாளிகளும், தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட 42,000 பேரும் பிரிட்டனில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பிரிட்டன் மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கின்றனர். இதற்கிடையில் துன்புறுத்தலினால் தங்கள் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வருவோர் ஒருபுறம் இருக்கின்றனர்.
மற்றொரு பக்கம் இங்கு வந்தால் சொகுசாக வாழலாம் என்று எண்ணி பிரான்ஸ் வழியாக பிரிட்டனுக்கு வருபவர்களும் இருக்கின்றனர். முன்பு அப்படி வருபவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் வரை அவர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். இனிமேல் அப்படி கிடையாது. அவர்கள் அடிப்படை வசதி கொண்ட புலம்பெயர்வோர் மையங்களில் தான் இனிமேல் தங்க வேண்டும். மேலும் லாரிகளில் புலம்பெயர்பவர்களை கடத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று ப்ரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளார்.