பிலிப்பைன்சில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்ற இளைஞருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
பிலிப்பைன்சை சேர்ந்தவர் கென்ட் ரியான் டோமவ். இவர் அப்பகுதிகளில் சுரங்க வேலை செய்து வருகின்றார். அந்தவகையில் இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிடபவான் என்ற பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது மார்பு பகுதியில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் இவரது மார்பு பகுதியில் கத்தி இருப்பதை கூட கவனிக்காமல் காயங்களுக்கு தையல் போட்டு, வலி நிவாரணி மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் அவருக்கு குளிர் காலங்களில் அடிக்கடி மார்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வேறு ஒரு பகுதியில் சுரங்க வேலை செய்வதற்காக விண்ணப்பிக்க சென்ற கென்டிற்க்கு உடற்தகுதி சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கென்ட் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முழு உடல் பரிசோதனை செய்துள்ளார். அச்சமயம் இவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அந்த எக்ஸ்ரேயில் கென்டின் மார்பு பகுதியில் நுரையீரலுக்கு மிக அருகில் ஒரு இன்ச் இடைவெளியில் கூர்மையான கத்தி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ” தங்கள் மார்பு பகுதியில் உள்ள கத்தியை உடனடியாக அறுவைசிகிச்சை செய்து வெளியில் எடுக்க வேண்டும், இந்த சிகிச்சையை முறையாக செய்ய அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும், அதுவரை நீங்கள் வெளியில் எங்கேயும் வேலைக்கு செல்ல கூடாது” என்று கென்டிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கென்ட் கூறியதாவது “இதற்கு முன்பு எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் கத்தி எனது மார்பு பகுதியில் இருக்கின்றது. இதனால் அவர்கள் மீது நான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, ஏனெனில் எனக்கு முதலில் உடல்நிலை சரியானால் போதும் அப்போதுதான் நான் சீக்கிரம் வேலைக்கு செல்ல முடியும்”என்று கூறியுள்ளார்.