திண்டுக்கல் பழனி அருகே வாகன சோதனையின்போது பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆவணமில்லாத ரூ.1 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் வாகன சோதனையில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 660 மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மடத்துக்குளம் பகுதியில் வசித்து வரும் பெட்ரோல் பங்க் ஊழியர் பிரவீன்பாபு என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் அந்த பணம் குறித்து விசாரித்ததில் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆவணம் இல்லாத அந்த பணத்தை பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.