பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் சாமிக்கு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் தங்க மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன், முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.