தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்துபவர்கள் மீது பொது சுகாதாரத் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்து விட்டதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம். உருமாறிய கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.