சென்னையில் மீண்டும் தேனாம்பேட்டை மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் கொரோனா அபாய பகுதிகளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் திடீரென கொரோனா அதிகரித்து வருவதால்,மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தாலே அது கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தான். விதி மீறலில் ஈடுபடும் பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மீண்டும் தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகள் கொரோனா அபாய பகுதிகளாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.