சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. இது சுந்தரர், கருவூர்தேவர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், அப்பர் போன்ற சமயப புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 19-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்த கோவிலில் நேற்று திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி கண்ணூஞ்சல் மண்டபத்தில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் எழுந்தருளினார்கள்.
இந்த திருக்கல்யாணத்தில் சுவாமிக்கு மாலை மாற்றி தீப ஆராதனைகள் செய்யப்பட்டது. அதன்பின் திருக்கல்யாண மண்டபத்திற்கு சுவாமி-அம்பாள் அழைத்து வரப்பட்டனர். அதன்பின்பு திருக்கல்யாண மேடைக்கு கோவிலில் இருந்து அழகிய மணவாளர் ரங்கநாத பெருமாள் அழைத்துவரப்பட்டார். அதன் பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சி பாபு பட்டர் தலைமையில் மந்திரங்கள் ஓதப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் குங்குமம், புதிய மஞ்சள் கயிறு ஆகியவை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோவில் அலுவலக பணியாளர்கள் மற்றும் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் செய்திருந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் காவல்துறையினர் செய்தனர்.